மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, இன்று சிறையில் இருந்து 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரின்போது கொல்லப்பட்ட தமிழர்களுக்காக, தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதுபோல் கடந்த மே மாதம் 21-ஆம் தேதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி அந்நிகழ்ச்சிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனாலும், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனையடுத்து, அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருமுருகன் உள்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறை நடைமுறைகள் முடிவடைந்ததும் இன்று திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த நான்கு பேரையும் மே 17 இயக்கத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, “எங்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் முழு உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும். மாணவர்களின் எதிர்பார்ப்பை வெல்லும் வகையில் போராட்டத்தை ஒருங்கிணைப்போம்” என்றார்.
மேலும், “எங்களுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து, படிக்க வேண்டிய புத்தகங்களை படிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி கொடுத்து, குண்டர் சட்டத்தின் மூலமாக உணவையும் இடத்தையும் கொடுத்து, படிப்பதற்கு அவகாசத்தையும் கொடுத்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் திருமுருகன் காந்தி கூறினார்.