அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டையிலைச் சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்ச் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
84 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இரண்டு தரப்பினரும் தாக்கல் செய்த ஆவணங்களின் விவரங்கள், வாத விவாதங்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் கோரிக்கை என்பன தொடர்பில் விளக்கங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இரட்டை இலை சின்னத்தை பழனிச்சாமி பன்னீர்ச் செல்வம் அணிக்கு ஒதுக்கியதை ஏற்க முடியாது என்றும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
தங்கள் தரப்பு வாதங்களை உரிய முறையில் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என்றும், தாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களையும் பார்வையிடவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டு , கட்சியில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக செயற்படத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு இரண்டு அணிகளும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியிருந்தது.