அனைத்துலக யோகா நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலகின் மிகப்பெரிய இயக்கமாக யோகா மாறி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
பின்னர் அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,கங்கை நதி பாயும் அந்த இடத்தில் இருந்து யோகாசனம் செய்வதை தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக கூறியுள்ளார்.
இந்த யோகா கலையானது உலகுக்கு இந்தியா கொடுத்துள்ள பரிசு என்றும், இதற்காக இந்தியா பெருமை கொள்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கத்துடன் வாழ்வதற்காக மூதாதையர்கள் உருவாக்கிய யோகா பயிற்சி முறையானது மனிதர்கள் கட்டுப்பாடுடன் வாழ வழி வகுக்கிறது என்றும், பாதிப்பை அதிகரிக்காமல் குணப்படுத்தும் ஆற்றல் யோகாவுக்கே உண்டு எனவும் அவர் விபரித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற போதிலும், அந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை யோகா மூலம்தான் காண முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.