தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி வருகிறார்.
சென்னைக்கு வந்து தங்கி இருக்கும் அவர் தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் மீது புகார் கூறி வருகிறார். சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீள்கிறது. நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் கேட்டால் அவர்களே இதுபற்றி சொல்வார்கள் என்று முன்னணி நடிகைகளையும் இதில் இழுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை லதா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஈரோடு சென்றார். அங்கு ஸ்ரீ ரெட்டி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை லதா கூறியதாவது:-
“நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர்? எல்லாத் துறைகளிலும் நல்லது கெட்டது என இரண்டுமே இருக்கும். திரைப்படத் துறையில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை திரிஷாவிடம் ‘ஸ்ரீ ரெட்டி உங்களையும் இழுத்துள்ளாரே?’ என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், ‘இதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரை பெரிய ஆளாக்க வேண்டாம்’ என்றார்.
மூத்த நடிகைகள் மட்டும் அல்லாது அர்த்தனா பினு, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட இளம் நடிகைகளும் ஸ்ரீ ரெட்டி மீது பாய்ந்துள்ளனர். அவர்கள் கூறும்போது ‘தவறான கண்ணோட்டத்தில் அழைத்தால் முடியாது என்று சொல்லி பழக வேண்டும். சரியான நபர்களுடன் பயணித்தால் இந்த பிரச்சினை வராது’ என்று கூறியுள்ளனர்.