தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று வழங்க்பபட்டுள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்திய மத்திய அரசிடம் இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருவதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவு விடுத்துள்ள போதிலும், அதனை மத்திய அரசு இன்னமும் சமர்ப்பிகாத நிலையில் நேற்றைய நாள் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விடயத்தில் ஆலோசனை நடாத்தாமை தொடர்பில் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து எதிர்வரும் 30ஆம் நாளுக்குள் சட்டமா அதிபர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.