திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்காலிகப் பின்னடைவின் பின்னர் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவருக்கு சிகிச்சை வழங்கிவரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவரின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து, மருத்துவமனையில் கட்சித் தொண்டர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மருத்துவமனையின் வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் மீது தடியடியும் நடாத்தப்பட்டதுடன், இன்று திங்கட்கிழமை காலை மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருமளவில் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு, காவல்துறையினரின் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் காவிரி மருத்துவமனைக்கு சென்று கலைஞர் கருணாநிதியைப் பார்வையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழத்தின் மூத்த தலைவர் கலைஞரை மருத்துவமனையில் தானும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் நேரில் பார்த்தததாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியனையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.