இந்த பருவகாலத்திற்கான முதலாவது பலத்த பனிப்பொழிவு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ரொரன்ரோவைத் தொட்டுச் சென்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் வேளையிலேயே ஆரம்பித்த பனிப்பொழிவு, இரவு முழுவதும் தொடர்ந்து, இன்று காலை ஐந்து மணியளவில் குறைவடையத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் இது குறித்து இன்று காலையில் தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், இந்த மோசமான வானிலை காரணமாக குறிப்பிடத்தக்க விபத்துகள் எவையும் நிகழவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் அதற்காக சாரதிகள் வீதிகளில் அவதானத்தை குறைத்துவிடக் கூடாது எனவும், தொடர்ந்தும் விழிப்புடனேயே வாகனங்களைச் செலுத்திச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீதிகளை மூடியிருந்த பனிப் படிவுகளை, உப்பு தெளிப்புகள் சீர் செய்துள்ளமையால், தமக்கு பெருமளவு பணிச் சுமைகள் ஏற்படவிலலை எனவும், பெரும்பாலும் வீதிகள் சீராக காணப்படுவதாகவும், எனினும் வீதிகள் இன்னமும் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், சாரதிகள் வழக்கத்தினை விடவும் அதிக தூர இடைவெளி விட்டே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு ரொரன்ரோ பகுதியில் தமது கண்காணிப்புக்கு உட்படட வீதிகளில் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வாகன விபத்துகள் நேர்ந்ததாகவும், பெரும்பாலானவை ஒரு வாகனம் மட்டும் தொடர்புடையவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.