சபரிமலைக்குச் செல்லும் பெண் பக்தர்கள் வாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லையென ஜமாத் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமேலி வாவர் பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) அறிக்கையென்றை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் , “வாவர் பள்ளிவாசல் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் பள்ளிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகின்றார்கள்.
இங்கு வருகைதரும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பள்ளிவாசலை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்திவிட்டு சபரிமலைக்கு செல்கின்றார்கள்.
பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வருகைதரும் எவருக்கும் தடையில்லை” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது மதக்கலவரம் மற்றும் கலகத்தை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.
சபரிமலையில் தற்போது இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாவர் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபட்டுச் செல்வது வழமை. ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளிவாசலுக்கு ஆண்களும், பெண்களும் சென்று வழிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.