அரசாங்கத்தை அச்சுறுத்துவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம் என அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும் இந்த எச்சரிக்கையானது மெய்யாகவே அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையிலானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் இன்று வரையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இலங்கை எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மேற்குலக நாடுகள் ரணிலை பிரதமராக வைத்துக் கொள்ள விரும்புகின்றது எனவும் அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.