தமிழகத்துக்கு வருகை தந்துள்ள மத்தியக் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய உட்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்தக் குழுவினர் 4 பேரைக் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிந்து, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியக் குழுவின் ஒரு பிரிவினர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அழகப்பாசாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் எடுத்துக்காட்டினர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களைச் சந்தித்த மத்தியக் குழுவினர், மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குறைகளைக் கேட்டறிந்தனர்.