யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் வியாபாரம் செய்யும்,முச்சக்கர வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தும், சுகாதார துறையினரின் குழப்பமான நடவடிக்கைகளாலும், யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருதனார்மடம் சந்தைக்கு குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், வியாபாரிகள் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
அங்குள்ள வர்த்தகர்கள் மத்தியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி போன்று தொடர்ச்சியாக பல இடங்களுக்கும் தொற்று பரவியிருக்கும் சாத்தியங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அதிகளவானோருக்கு தொற்று இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், முதலில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட தொற்றினால், 30 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய உடுவில் பிரதேச செயலர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் 104 பேருக்கு மீண்டும் இன்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பீதியை அதிகப்படுத்தியுள்ளது.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் மத்தியில் பெருமளவு தொற்று எற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு அப்பாலும், தொற்றாளர்கள் பரவியிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அடுத்து வரும் நாட்கள் யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு சவாலானவையாக இருக்கக் கூடும் என்றும் சுகாதாரத் தரப்பினர் எதிர்வு கூறியுள்ளனர்.