மாகாணசபைத் தேர்தல்களுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் நடத்தினால், செலவினங்களைக் குறைக்க முடியும் என்று, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் இழுபறியாக உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு 4.5 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, 3.6 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் செலவினங்களைக் குறைக்க முடியும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுக்க முடியாது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹெவ மேலும் கூறியுள்ளார்.