யுரேனியத்தை செறிவூட்டும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு, ஈரானுடன் செய்து கொண்ட்ட அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் அவர் விதித்துள்ளார்.
இதனையடுத்து, அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மாறாக, 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் போடோ (Fordow) நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில், 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணித்து வரும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.