அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, அதிகார மாற்றத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் ஜனவரி 20ஆம் திகதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும் என்றும் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது ட்ரம்ப ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு உலகெங்கும் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் அமெரிக்க மக்கள் மத்தியிலும், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ட்ரம்பின் சொந்த கட்சியினர் கூட அவரை வெறுக்கத் தொடங்கியிருப்பதால், வேறு வழியின்றியே அவர் அதிகார மாற்றத்துக்கு இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.