பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் சிறிலங்கா அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வெண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான சர்வதேச மையத்தினால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து இன்று தனது ஊடக அறிக்கையை வெளியிட்ட இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான சர்வதேச மையம் ஐ.நா.வுக்கு குறித்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.
நினைவுத்தூபி கல் மற்றும் மண்ணால் கட்டியெழுப்பப்பட்ட கட்டடம் அல்ல. உணர்ச்சிகளின் உறைவிடம். ஆந்தவகையில் இறந்தவர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமையைக்கூட சிறிலங்கா அரசு பறித்து வருகின்றது.
தவிர தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களையும் அழித்து வருகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான அரசே தற்போது மீண்டும் ஆட்சியிலுள்ளது. அது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்துவருகின்றது.
இதன் ஒரு பகுதியாகவே முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை கவனமாகவும் சீராகவும் அகற்ற திட்டமிட்டுள்ளது.
இதனாலேயே முள்ளி வாய்க்கால் நினைவு சின்னத்தை அகற்ற ஒத்துழைக்காத முன்னாள் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்து அதற்கு ஒத்துழைத்த தற்போதைய துணைவேந்தரை நியமித்து அதனை அரங்கேற்றியுமுள்ளது.
இத்தகைய செயல்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதுடன் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அவர்களில் தொடர்ச்சியான நிராகரிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழ் மக்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்தது மட்டுமன்றி அவர்களை நினைவுகூர்ந்து எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதனைக் கூட தடைசெய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





