குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆராய்ச்சியில், யாழ்.பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும், யாழ்.பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளையும், இணைத்துக் கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்ப கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் “தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில், கடந்த திங்கட்கிழமை, குருந்தூர் மலையில் அகழ்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், தாங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்.
இதன்போது இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ்.பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆராய்ச்சி அதிகாரிகளையோ உள்வாங்காமல் அகழ்வு பணி ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.
ஆராய்ச்சி பணி, வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.
எனவே, யாழ். பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும் யாழ்.பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி அதிகாரிகளையும், இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என கூறப்பட்டுள்ளது.