சிவகாசி அருகிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து அங்கு ஏற்பட்டது. இதன்போது 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.
இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு திரண்டு வந்த அயலூர் மக்கள் காயமடைந்தவர்களை விரைவாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.





