நியூசிலாந்தில் வியாழன் இரவிலிருந்து அடுத்தடுத்து பலமுறை நிலநடுக்கங்கள் தாக்கியதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஒக்லாந்து அருகே வியாழன் மாலையில், 7.3 ரிக்டர் அளவிலான முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இதன் மையப்பகுதி ஒக்லாந்தில் இருந்து 414 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது என்றும், கடல்மேற்பரப்பில் இருந்து 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும், கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பசுபிக் கடலில் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், சில மணிநேரத்தில் இரண்டாவது நிலநடுக்கம், 7.4 அளவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து, நியூசிலாந்து நேரப்படி வெள்ளி காலையில் மூன்றாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8.1 அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, நியூசிலாந்து மற்றும் ஹவாய் உள்ளிட்ட பசுபிக் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இங்கு, சுனாமி அலைகள் 10 அடி உயரம் வரை தாக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளி காலையில் மீண்டும் 7.2 அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.





