மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள சிறிலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து நீதிக்காய் போராடும் அம்பிகை செல்வகுமாரின் அறப்போர் இன்றுடன் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
மனித நேயத்தின் உச்சம் நாங்களே என மார்தட்டிக்கொள்ளும் பிரித்தானிய அரசு அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது உலக நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள நிலையிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்





