கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்தை சிறிலங்கா அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில், இன்று காலை 6.30 மணிக்கு நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில், கோரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல என்றும், இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மக்களின் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே”, “இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே”, “மத நல்லிணக்கத்தை சிதைக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
யாழ். மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.