சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தாமதிக்கப்படுவதை கண்டித்தும், இன்று கறுப்பு ஞாயிறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பேராயரின் வேண்டுகோளுக்கு அமைய, இன்று காலை தேவாலயங்களில் திருப்பலியில் பங்கேற்றவர்கள், கறுப்பு ஆடைகளை அணிந்து கொண்டு சென்றிருந்தனர்.
தேவாலயங்களில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனையை அடுத்து, உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை வழங்குமாறும் வலியுறுத்தும் பதாதைகள், சுலோக அட்டைகளுடன், கத்தோலிக்க மதகுருக்களும், பொதுமக்களும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
குண்டு தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த போராட்டங்களில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும், பௌத்த பிக்குகள் சிலரும் கலந்து கொண்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.





