தாய்வான் விவகாரத்தில், அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தாய்வான் சுதந்திர நாடாக உருவான போதும், அதனை தமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், தேவைப்பட்டால் அதனைக் கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தாய்வானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்தது.
அமெரிக்காவின் தற்போதைய ஜோ பைடன் நிர்வாகம், தாய்வான் விவகாரத்தில் முந்தைய நிர்வாகத்தின் கொள்கையை கடைபிடித்து வருவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தாய்வானுக்கு ஆதரவு காட்டும் டிரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி “தாய்வான் பிரச்சினையில் சீன அரசு சமரசம் அல்லது சலுகைகளுக்கு இடமளிக்காது. தாய்வான் பிரச்சினையின் ஆழத்தை முழுமையாக புரிந்துகொள்ள அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
நெருப்புடன் விளையாடும் முந்தைய நிர்வாகத்தின் அபாயகரமான கொள்கைகளை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





