ஹைதராபாத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சியாமளா கோலி என்ற நீச்சல் வீராங்கனை 30 கிலோ மீற்றர் நீளமுடைய பாக்குநீரிணையை வெற்றிகரமாக நீந்திக் கடந்துள்ளார்.
நேற்று அதிகாலை 4.15 மணியளவில் தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்த அவர் 13 மணித்தியாலங்கள் 43 நிமிடங்களில், தமிழகத்தின் அரிச்சல்முனை கரையை சென்றடைந்துள்ளார்.
முன்னதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் ஆகியோர், கொடியை அசைத்து வைத்து, இந்தச் சாதனைப் பயணத்தை தொடக்கி வைத்தனர்.
சியாமளா கோலி, பாக்கு நீரிணையை வெற்றிகரமாக நீந்திக் கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பையும், 13 ஆவது நபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
தாம் 5 மணிநேரத்திலேயே இந்திய கடல் எல்லையை அடைந்து விட்டதாகவும், அதற்குப் பின்னரே, கடலின் தன்மை கடுமையானதாக இருந்தது என்றும் சியாமளா கோலி தெரிவித்துள்ளார்.