முழு ஊரடங்கு வரப்போகிறது என்று வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வதந்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
சூழலுக்கேற்ப முடிவு எடுக்கப்படும். பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அரசின் வேலை அல்ல.
வரக்கூடிய நாட்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.