பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச நேற்று கேள்வி நேரத்தின் போது, பீல்ட் மார்ஷல் பதவியில் உள்ள ஒருவர், இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பதவியில் உள்ள ஒருவர், நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதை அரசியலமைப்பு தடை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச,
“பீல்ட் மார்ஷல் பதவி இராணுவத்தில் உள்ள உயர் பதவியாகும்.
இராணுவச் சம்பிரதாயங்களுக்கு அமைவாக பீல்ட் மார்ஷல் பதவியும், அதற்கு இணையாக கடற்படை மற்றும் விமானப்படையில் உள்ளவர்களுக்கும் அப்பதவி வழங்கப்படுகிறது.
இந்தப் பதவியைப் பெறுபவர்கள் வாழ்நாள் வரையில் அந்த பதவியில் இருப்பார்கள்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அவரது பணியாட் தொகுதிக்காக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குப் படையினரின் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொடவுக்கு, பணியாட் தொகுதிக்காக 09 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதுவும் வழங்கப்படவில்லை ஆயினும், பணியாட் தொகுதியினரின் பாவனைக்காக ஜீப் வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படையைச் சேர்ந்த மார்ஷல் ஒவ் த எயர் போர்ஸ், றொஷான் குணதிலக்கவுக்கு பணியாட் தொகுதிக்காக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ள போதும், அவருக்கு வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பீல்ட் மார்ஷல் பதவி வகிப்பவருக்கு சம்பளமோ அல்லது ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை.
பீல்ட் மார்ஷல் அல்லது அதற்கு இணையான பதவியில் இருப்பவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.