யாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ். போதனா மருத்துவமனை ஆகிய இடங்களிலுள்ள ஆய்வு கூட்டங்களில் நேற்று 761 பேரின் மாதிரிகள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போதே, வடக்கைச் சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும், ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர் உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் பருத்தித்துறை மருத்துவமனை நோயாளர் விடுதியில் ஒருவருக்கும், தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
நாவாந்துறையைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கும், யாழ்ப்பாண நகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவில் வாசி ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த யாழ். மருத்துவமனை வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.