ஈரானின் நிலக்கீழ் அணு ஆய்வு நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷெரீப் (Mohammad Javad Zarif) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் நட்டான்ஸ் (Natanz) இல் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையம், இஸ்ரேலிய மொசாட் புலனாய்வு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
பாரிய வெடிப்பொன்று காரணமாக, ஈரானின் உள்ளக அணு ஆய்வு நிலையம் ஒன்று முற்றாக அழிவடைந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு தரப்பினரை மேற்கோள்காட்டி ‘நியூ யோக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நிலையத்தை மீள இயக்குவதற்கு, குறைந்தது 9 மாத காலம் எடுக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஈரானுடன் அணு ஆயுத தடை குறித்த பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





