யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த தலா ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், தனிமைப்படுத்தல் விடுதியில் மூவரும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற ஒருவருமாக நால்வர், தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், மன்னார் மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நல்லூர், செட்டிதெருவில் வசிக்கும் 81 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 12வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.





