இந்தியாவில் மே 1 ஆம் நாள் முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பை 18 ஆக இந்திய அரசு குறைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலையில், மருத்துவ நிபுணர்கள், மருந்து நிறுவனங்களுடன் மெய்நிகர்முறையில் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் உள்ள மருந்தங்களில் கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கும் இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உற்பத்தி செய்யப்படும், 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும், 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்கலாம் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.