கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. தினமும் இரவு நேரம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அவசியப் பயன்பாட்டு விஷயங்கள் நீங்கலாக மற்றவை அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் அவசிய பயன்பாட்டுக்காக மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
மீண்டும் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களது வாழ்க்கை சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களை செய்துத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.