பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இந்தியா ஏற்கனவே பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ‘பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேகமாக, உறுதியாக, மிகப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்தியா ஏற்கனவே, உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நானும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இணைந்து இந்தியா-அமெரிக்கா பருவநிலை மாற்றம் மற்றும் தூய்மை எரிசக்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்க உள்ளோம்.
தூய்மையான எரிசக்தி, காடு வளர்ப்பு, உயிரி எரிபொருள் ஆகியவற்றை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா, தன் கடமையை சரியாக செய்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.