தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
ஆயினும், ஒக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும்போது அரசாங்கத்தால் இதுபோன்ற கருத்தைக் கூறமுடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் ஒக்சிஜனை வழங்க உதவும் வகையில் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் செப்பு கரைக்கும் பகுதி திறக்கப்பட வேண்டுமென வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது. ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் சட்டம், ஒழுங்கு்ப பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நிறுவனத்திற்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகம் நிலைமையைக் கையாள்வது கடினம் என்றும் தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
இதையடுத்து, மக்கள் இறந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என அரசு சொல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.