லிபியாவில், மத்திய தரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் 130 அகதிகளை ஏற்றிச் சென்ற இறப்பர் படகின் சிதைவுகள் லிபிய தலைநகர் திரிப்போலிக்கு வடகிழக்கே மத்தியதரைக் கடலில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த எவரும், மீட்பு கப்பலினால் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதும், பத்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து போர் மற்றும் வறுமையினால், வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாக லிபியா மாறியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது