தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடந்தால், தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன.
தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும்.
மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு, மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும்.
கொடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது.
தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன். ” என்றும் சீமான் கூறியுள்ளார்.