வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 778 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, யாழ். மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 4 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பண்டத்தரிப்பு கிராமிய சித்த மருத்துவமனையின் மருத்துவர், தாதி, பணியாளர் உள்ளிட்ட 5 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 32 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 18 பேர் மற்றும் எழுமாற்றான சோதனையில் 4 பேர் என மொத்தம் 22 பேரும், பருத்தித்துறை மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கற்கும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த 14 காவல்துறை அதிகாரிகளுக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, வெதுப்பகத்தை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டச் செயலகத்தின் இரு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.