தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான டவ்தே புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவாவிற்கு தென்மேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
நாளை, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடலில் நிலை கொள்ளும் புயல், செவ்வாய் அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலால், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 150 முதல் 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், கப்பல்கள் மற்றும் வானூர்திகளுடன் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.