கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் உள்ளடங்கலாக, முடக்கப்பட்ட பகுதிகள், நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் சந்தையில் எழுமாறாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,பொதுச் சந்தை மற்றும் வணிக நிலையங்கள் உள்ளடங்கலாக கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு கிராம அலுவலர் பிரிவுகள், கடந்த 2ம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த பிரதேசத்தில் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், நாளை குறித்த பகுதிகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய பிசிஆர் சோதனை முடிவுகளின் அடிப்படையில் தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
7ஆம் யுனிற் பகுதியில் 07 பேரும், 5ஆம் யுனிற் பகுதியில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, குறித்த பிரதேசம் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
நாளை இந்தப் பிரதேசத்தை முடக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.