தமிழின அழிப்புக்கு நீதி கோரி கனடாவின் ஐந்து மாகாணங்களில் இன்று ஏக நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கனடிய தமிழர் சமுகமும், கனடிய தமிழர் மாணவ சமூகமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள தொடர் போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று பிற்பகல் 2 மணி முதல் ஐந்து மணி வரையில் நடைபெறவுள்ளது.
ஒட்டோவா நாடாளுமன்றத்தின் முன்பாகவும், ஒன்ராரியோ, அல்பேர்ட்டா, கியூபெக், வின்னிபெக் ஆகிய சட்டமன்றங்களின் முன்பாகவும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் தமிழின விடியலுக்காக அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். அத்துடன், கனடிய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக இந்தப்போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தின்போது, அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டும், ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டும், ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் சர்வதேசத்திடத்தில் முன்வைக்கப்படவுள்ளன.





