முக்கிய செய்திகள்

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்

352

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய் கேட்டுக்கொண்டார்.

கடந்த 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதிசெய்தார். இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய் டுவிட்டரில்,”நோபல் பரிசு பெற்றவர், யூனிசெஃபின் அமைதிக்கான தூதர் என்ற முறையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லையில் வசிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டு நான் இதை கூறுகிறேன். அனைவருக்கும் போரின் கொடுமைகள் தெரியும். பழிவாங்குவது நல்ல எதிர்த்தாக்குதலாக ஒருபோதும் இருக்காது. போர் ஆரம்பித்துவிட்டால் பல லட்சணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை. தற்போது போரின் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், இந்திய பிரதமர் மோடியும் கடினமான நேரங்களில் உண்மையான தலைமைப் பண்பை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் அமர்த்து பேசி, கைகுலுக்கி பேச்சுவார்த்தை மூலம் தற்போதுள்ள மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்க்க இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும்.

இரு நாடுகளின் குடிமக்களுக்கும் அவர்களது எதிரிகள், தீவிரவாதம், கல்வி அறிவின்மை, வறுமை என்று நன்கு தெரியும். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *