BREAKING NEWS

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்!

1438

உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் இலட்சியப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அரசியல் களத்தில் எடுத்தியம்பி விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கவென தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய அடைவானது உண்மையில் தமிழினத்தின் சாபக்கேடாகவே மாறியுள்ளது.

மக்கள் நலனை மறந்து பதவிகளுக்காக துரோகிகளுடன் கூட்டணி அமைத்திருக்கும் கூட்டமைப்பின் இந்நிலையானது எம்மைப் பொறுத்தவரை ஆச்சரியமான ஒன்றோ, எதிர்பார்த்திருக்காத ஒன்றோ கிடையாது. இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர்களை அழித்தொழித்து நிர்க்கதியாக்கிய பகைவர்களுடனே ஒன்றாக கூடிக்குலாவி கும்மியடித்து அடிபணிவு அரசியல் செய்து வருபவர்களுக்கு, இந்த பேரவலத்தை தந்த இனப்படுகொலையாளிக்கு கோடரிக் காம்பாக இருந்த ஈபிடிபி கட்சியுடன் அணிசேர்வதென்பது சாதாரணமான ஒன்றாகும்.

கொள்கை மறந்து ஈபிடிபியுடன் கூட்டணி வைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கிய விமர்சனங்களில் கூட எமக்கு உடன்பாடில்லை. ஆயுத மௌனிப்பின் பின்னர் முள்ளிவாய்க்கால் மணல் பரப்பிலும் நந்திக் கடலோரத்திலும் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்துவிட்டு இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதையே இலட்சியமாக வரித்துக் கொண்டவர்கள் இன்று கூட அந்த கொள்கை வழியேதான் இந்த கூட்டணியை அமைத்துள்ளார்கள்.

சுதந்திர தமிழீழ விடுதலை என்ற இலட்சியப் பாதையில் ஆரம்பித்த பயணம் கொள்கைப் பிரழ்வு கண்டு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று தடம் மாறியது மட்டுமல்லது அடிபணிவு அரசியலின் உச்சம் தொட்டதுடன் தமிழினத் துரோகத்திலும் புதிய சகாப்தம் படைத்த ஈபிடியுடன் சேர்ந்தாவது உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி-அதிகாரங்களை கைப்பற்ற துடிப்பவர்கள் அதே வழிமுறையில்தான் தேசிய அரசியலிலும் பதவி-சுகங்களுக்காக இனத்தின் விடுதலை வேணவாவையே அடமானம் வைத்து அடிபணிவு அரசியல் செய்து வருகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரம் கோலோச்சும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏலவே இணக்க அரசியலின் பெயரால் மைத்திரி-ரணில் கூட்டாட்சியின் பங்காளர்களாக மாறியமையும் தற்போது அதே தமிழினத் துரோகத்தின் வழித்தடத்தில் ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்து வருவதும் தமிழ்த் தேசியத்தின் மீதான மாறா உறுதியுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சியை முடக்கி பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் அரசுக்கட்சியுடன் சேர்ந்து இயங்கும் பங்காளி காட்சிகள் இந்த தேசிய விரோத செயலில் இயங்கும் தமிழ் அரசு கட்சியின் செயற்பாட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கும் பங்காளிகளாகவே உள்ளனர். தமிழ்த் தேசியப் பாதையில் விலகிச் செல்பவர்களை ஐநா மன்றத்தில் மேடை எடுத்து கொடுப்பவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டிக்கொள்கின்றோம். தூயகத்தில் இருந்து வரும் ஒருசில இரட்டை வேடதாரிகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் இவர்கள் பேசும் பேச்சும் தாயகத்தில் இவர்கள் நடந்து கொள்கின்ற முறையும் இவர்களின் வேடத்தை வெளிக்காட்டுகிறது.

சுதந்திர தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது உறுதியுடன் முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கச் செய்தார்களோ அவ்வாறே அரசியல் களத்திலும் தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் வழி நின்று உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தும் அமெரிக்க-சிங்கள-இந்திய கூட்டுச் சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரலில்தான் இவை யாவும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்த நாசகார கூட்டுச் சதியில் இருந்து தமிழர் தாயகத்தையும், தமிழ் மக்களையும், தமிழர் இறைமையும் பாதுகாக்கும் கடப்பாடு ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும். தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு இழையை மட்டுமே தூக்கிப் பிடித்துக் கொண்டு எமது அடிப்படை உரிமைகளை, தமது சுயலாபங்களுக்காக முற்றாகப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கை இனியாவது எமது மக்கள் கைவிட்டாக வேண்டும்.

பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காகவே நாங்கள்! என்ற தாரக மந்திரத்தை மூச்சாக கொண்டு மக்கள் விரோத அரசியல் செய்துவரும் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியல் களத்தில் இருந்து முற்று முழுதாக துடைத்தெறியப்படுவது ஒன்றே இந்த அவலங்களுக்கான முற்றுப்புள்ளியாகும். இதை செய்யத் தவறின் வரலாறு எம்மை ஒரு போதும் மன்னிக்காது.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *