காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் அழைப்பு விடுத்திருந்த இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு, தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஆதரவு தெரிவித்தன.
அதன் அடிப்படையில் இன்று போராட்டங்களில் ஈடுபட்ட ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தே.மு.தி.கவின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுவருவதுடன், இதில் உடல்நிலை காரணமாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்ற போதிலும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
முழுஅடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும், தனியாருக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் இயங்கி வருவதுடன், இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்றுவரும் புதுச்சேரியிலும் இந்த முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என்பன இயங்கவில்லை என்பதுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.