இந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு ஒன்று, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்கொள்வதற்காக வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, செப்டம்பர் 17, 18ஆம் நாள்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளதுடன், மத்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த மாநாட்டில் இந்தியாவைப் பிரிநிதித்துவம் செய்து துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு ஒன்று மாநாட்டில் கலந்துகொள்ள வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
வெனிசுலா பயணத்திற்கு முன்னராக ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்த அன்சாரி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், மாநாட்டில் யார் பங்கேற்பது என்பதில் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர்கள்தான் இந்த மாநாட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும், சில வேலைகளில் பிரதமர்கள் செல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் பங்கேற்பு தொடர்ந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள ஹமீது அன்சாரி, இந்த மாநாட்டில் தீவிரவாதம் தொடர்பான கவலைகளை இந்தியா எடுத்துரைக்கும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.