தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பில் பல கட்சிகள் தங்களின் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சீத்தாராமன், அதன்போது உள்ளாட்சித் தேர்தல் நாள் உள்ளிட்ட கால அட்டவணையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஒக்டோபர் மாதம் 17ஆம் மற்றும் 19ஆம் நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்பதுடன், தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்ட மறுநாளான இன்று திங்கட்கிழமையில் இருந்து வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்றும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஒக்டோபர் மாதம் 3 ஆம் நாள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஒக்டோபர் மாதம் 4ஆம் நாள் நடைபெறும் என்றும், ஒக்டோபர் மாதம் 6-ஆம் நாள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாடாக இருக்கும் என்பதுடன், வாக்கு எண்ணிக்கை ஒக்டோபர் 21-ஆம் நாள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
91,098 வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில், மாநிலம் முழுதும் உள்ள 5.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
ஆனால் தேர்தல் அட்டவணை வெளியிட்ட நாளின் மறுநாள் முதலே வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்படும் கால அவகாசம் ஆரம்பமாகும் இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி போன்றன கட்சிகள் தங்களின் கண்டனங்களையும் அதிருப்திகளையும் வெளியிட்டுள்ளன.