கியூபா மீதான வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தமை வரவேற்கத்தக்க முடிவு என பல்வேறு நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த பகைமையானது, 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்டிரோ ஆகியோரின் பேச்சின் தொடர்ச்சியாக மாற்றம் கண்டது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக குறைவடைந்து, தற்போது இரண்டு நாடுகளிடையிலும் தூதரக உறவுகள் மீண்டும் மலர்ந்துள்ளன.
இந்த நிலையில் கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா பிறப்பித்த வர்த்தக தடையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச்சபையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்டது.
இதில் 190 நாடுகள் ஆதரவு தெரிவித்ததுடன், கிட்டத்தட்ட கருத்தொற்றுமையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் 25 ஆண்டுகளாக இதை எதிர்த்து வந்த அமெரிக்கா, முதல் முறையாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அமெரிக்காவின் அந்த முடிவை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.