கதாநாயகன்–கதாநாயகி: தனுஷ்–திரிஷா.
டைரக்ஷன்: துரை செந்தில்குமார்.
கதையின் கரு: கொலையும் செய்வாள், அரசியல் காதலி!
வாய் பேச முடியாத கருணாஸ்–சரண்யா தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 2 மகன்கள். இரண்டு தனுஷ். வாய் பேச முடியாத கருணாசுக்கு அரசியல் மீது தீவிர பற்று. மெர்க்குரி கழிவுகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை மூடக்கோரி நடக்கும் போராட்டத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
கருணாசின் ஆசைப்படி தைரியசாலியான மூத்த மகன் கொடி (தனுஷ்) அரசியலுக்கு வருகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையிலான எதிர் கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறார். இளைய மகன் (இன்னொரு தனுஷ்), கல்லூரி பேராசிரியர். பயந்த சுபாவம். ‘கொடி’ தனுசுக்கும், ஆளும் கட்சியின் பேச்சாளர் திரிஷாவுக்கும் காதல். எதிர் எதிர் கட்சிகளில் இருந்தாலும் இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்க்கிறார்கள்.
இந்த நிலையில், இடைத்தேர்தல் வருகிறது. ஆளும் கட்சி சார்பில் திரிஷாவும், எதிர் கட்சி சார்பில் தனுசும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். மூடப்பட்ட மெர்க்குரி கழிவு தொழிற்சாலை, தேர்தலில் முக்கிய பிரச்சினையாகிறது. இது தொடர்பாக தனுஷ் மீது திரிஷாவுக்கு சந்தேகம் வருகிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னை காட்டிக் கொடுத்து விட்டதாக சந்தேகப்படுகிறார். அரசியலா, காதலா? என்று யோசிக்கும் அவர் அரசியலுக்காக காதலர் தனுசை கொலை செய்து விடுகிறார்.
அண்ணனின் மரணம் தம்பி தனுசை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அவரை எப்படி மாற்றுகிறது? அண்ணனை கொன்ற திரிஷாவை அவர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? என்பது மீதி கதை.
தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அண்ணனுக்கு தாடி–மீசை, தம்பிக்கு பளிச் முகம் என தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருக்கும் அவர், நடிப்பிலும் அதை கொண்டு வந்திருக்கிறார். அடிதடி சண்டைக்கு அஞ்சாதவர், அரசியல்வாதியான ‘கொடி’ தனுஷ். பயந்த சுபாவமுள்ளவர் தம்பி தனுஷ். இரண்டு வேடங்களிலும் தனுஷ், பிரகாசிக்கிறார். திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என அவருக்கு 2 கதாநாயகிகள். திரிஷாவுடனான காதலில், நெருக்கம். அனுபமா பரமேஸ்வரனுடனான காதலில், மென்மை. தம்பியின் காதலுக்காக அண்ணன் முக சவரம் செய்து கொண்டு போடும் சண்டை காட்சியில், சுவாரஸ்யம்.
இதுவரை அமைதியான–அழகான காதலியாகவே வந்து போன திரிஷாவுக்கு இந்த படமும், கதாபாத்திரமும் ஒரு மாறுதல். தனுசுடன் காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருக்கும் அவர், அடுக்கு மொழி வசனம் பேசும் பொதுக்கூட்ட மேடை காட்சியில் மட்டும் திணறியிருக்கிறார். இன்னொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன், பொருத்தமான தேர்வு.
கருணாசுக்கு அனுதாபகரமான வேடம். அவருடைய முடிவு, எதிர்பாராத அதிர்ச்சி. எஸ்.ஏ.சந்திரசேகரன் நல்ல அரசியல்வாதியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், நண்பராக காளி வெங்கட், மோசமான அரசியல்வாதியாக மாரிமுத்து என முக்கியமான வேடங்களில், திறமையான நடிகர்கள்.
பாடல் காட்சிகளில் வெங்கடேசின் ஒளிப்பதிவு, பளிச். சந்தோஷ் நாராயணன் இசையில், ஒரே ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. இரட்டை வேட கதாநாயகனின் கதையை ஒருவர் வீரமானவர், இன்னொருவர் பயந்த சுபாவம் என வேறுபடுத்தி காட்டியிருப்பது, பழைய பார்முலா. அதை படம் முழுக்க கையாளாதது, புத்திசாலித்தனம். அடுத்தது என்ன? என்று எதிர்பார்க்க தூண்டுகிற விறுவிறுப்பான திரைக்கதை, படத்தின் பெரிய பலம்.