நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது.
பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டி தீர்த்ததால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
133 ரன்னில் சுருண்டது
55.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 31 ரன்கள் எடுத்தார். அவர் கேப்டனாக விளையாடும் 50–வது டெஸ்ட் இதுவாகும். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் அறிமுக பந்து வீச்சாளர் காலின் டி கிரான்ட்ஹோம் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது அறிமுக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரரின் சிறப்பான பந்து வீச்சாகும்.
இதற்கு முன்பு 1951–ம் ஆண்டில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அறிமுக வீரர் அலெக்ஸ் மோய் 155 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது. டிம் சவுதி, டிரென்ட்பவுல்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அதிர்ச்சி தொடக்கம்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. டாம் லாதம் 1 ரன்னிலும், கேப்டன் கனே வில்லியம்சன் 4 ரன்னிலும், ராஸ் டெய்லர் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரராக களம் கண்ட ஜீத் ராவல் 108 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 55 ரன்னும், ஹென்றி நிகோல்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.