குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை.
குழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு
பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேடவேண்டி உள்ளது.
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, கணினி, டி.வி. ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்க தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைபீனைல் ஈதர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவு சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியை பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.
வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாக குழந்தை பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதி தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.
குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை பாதிப்படைய செய்கின்றன.