கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்திக்காட்டுவோம் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, 2ஆவது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் இம்முறை போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வாக அறிவித்தது.
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அதில் பேசிய அவர் காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தார்.
இதில் பேசிய பினராயி விஜயன்,”கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் எந்த பெரிய மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும்தான் அவர் போட்டியிடுகிறார். கேரளாவில் அவர் தனது அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கவே இங்கு போட்டியிட முடிவு எடுத்துள்ளார்” என்று விமர்சித்தார்.
“பாஜகவுக்கு எதிராக போராடுவது மட்டுமே ராகுல் காந்தியின் விருப்பம் என்றால், அவர் அந்த கட்சிக்கு எதிராக போட்டி போட்டிருக்கவேண்டும். கேரளா மாநிலத்தை பொறுத்தவரை இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான போட்டியே நிலவுகிறது” என்று கூறினார்.
“ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்திருப்பது, இடதுசாரிகளுக்கு எதிரான போட்டியாகவே நான் பார்க்கிறேன். எங்களுக்கு பதற்றம் ஒன்றும் இதனால் ஏற்படவில்லை. எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வயநாடு தொகுதியில் அவரை வீழ்த்திக்காட்டுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.